மே 13 இன்று
தமிழ் கவிஞர் தாராபாரதி, ஆங்கிலத்தில் எழுதிய
ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆர். கே. நாராயண் ஆகியோரின் நினைவு தினம்....
திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
இவரது படைப்புக்கள்
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்...
தன்பாட்டுத்திறத்தால் மக்களை விழிப்புணர்வூட்டிய கவிஞர் தாராபாரதியின் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற பாடல் பலரது நெஞ்சிலும் நின்று வளர்த்தெடுப்பவை.
திண்ணையை இடித்து தெருவாக்கு
×******************************************
உட்கார் நண்பா நலந்தானா?-நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?
புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி
புலம்ப வேண்டாம்-நெல்கூட
புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது
பூமியின் பசியைப் போக்க வில்லை?
கடலின் நான் ஒரு துளிஎன்று
நீகரைந்து போவதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு
வந்தது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது
சந்ததிகூட மறந்துவிடும் -உன்
சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?
உணவு ஆடை வீடென்று -உன்
உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
மனைவி மக்கள் வீடென்று -உன்
மனதின் எல்லையை சுருக்காதே
திண்ணைதானா உன்தேசம்-உன்
தெருவொன் றேவா உன் உலகம்
திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
தெருவை மேலும் விரிவாக்கு
எத்தனை உயரம் இமய மலை -அதில்
இன்னொரு சிகரம் உனது தலை
எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வாங்கும் விலை;
நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்
-தாராபாரதி
No comments:
Post a Comment