Wednesday, December 14, 2016

மன உறுதி


ஒரு அரசனுக்கு
தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.
அதை குணப்படுத்த,
மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள
மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..!
அதற்கு மலையடிவாரத்தில்
உள்ள தேவதை
வழிகாட்டினால்தான் முடியும்..!
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..!
அதில் முதலாமவன்
"நான் கொண்டுவருகிறேன்" என கிளம்புகிறான்..!
தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..!
"நான் உன்பின்னால் வருவேன்..!
நான் இடது பக்கம் திரும்பு
என்றால் இடது பக்கம்
திரும்ப வேண்டும்..!
வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்..!
நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..!
நடந்து கொண்டே
இருக்கவேண்டும்..!
எது நடந்தாலும் பின்னால்
திரும்பி பார்க்ககூடாது..!"
இதுதான் நிபந்தனை என்கிறது..!
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..!
தீடிரென பின்னால்வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை..!
"என்னாயிற்று..?"என தன்னையறியாமல்
முதாலமவன் திரும்பி
பார்க்கிறான்..!
நிபந்தனையை மீறிவிட்டதால் அவன் கற்சிலையாகிவிடுகிறான்..!
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..!
நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்..!
தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது..!
ஆர்வம் மிகுதியால் திரும்பிப்பார்க்கிறான்..!
அவனும் கற்சிலையாகி விடுகிறான்..!
மூன்றாமவன் அடுத்து வருகிறான்..!
இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை பின் செல்கிறது..!
இவனும் பின் வரும்
சத்தம் நின்று போனாலும்
முன்னே செல்கிறான்..!
பின்னால்
அலறல் சத்தம்,
சிரிப்பொலி இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று
மூலிகையையும் கை பற்றுகிறான்..!
குறிப்பு:
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு..!
அது நிபந்தனையை விதித்துவிட்டு, செயல் உறுதியைத்தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும்..!
SankaranNsk

Tuesday, December 13, 2016

புயலுக்கு ஏன் பெயர்?


Tuesday, 13 December 2016
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?
வானிலை ஆய்வாளர்களும்,
கடல் மாலுமிகளும்,
பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே
ஒவ்வொரு புயலுக்கும்தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு
பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு,
தயாரிப்பு,
மேலாண்மை,
பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
.
புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு
ஒரு பெயர் சூட்டும் வழக்கம்
20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது.
பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது
அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம்.
.
ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்
அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம்..
.
அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே,
மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது,
எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும்,
புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை
இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களைப்போல புயல்களுக்கும்
பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.
.
ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது.
பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.
.
இரண்டாம் உலகப் போர்
காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை
வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.
1953-இல் இருந்து
அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால்,
அழிவை ஏற்படுத்தும்
புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு,
1978 முதல்
ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு
இந்தியா,
இலங்கை,
வங்கதேசம்,
தாய்லாந்து,
மியான்மர்,
மாலத்தீவு,
ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன.
.
புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது.
.
தில்லியில் உள்ள
உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம்
2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
.
வங்கதேசம்,
இந்தியா,
மாலத்தீவுகள்,
மியான்மர்,
ஓமன்,
பாகிஸ்தான்,
இலங்கை,
தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
இதில்
இந்தியா கொடுத்து
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள்
அக்னி,
ஆகாஷ்,
பிஜ்லி,
ஜல் (நான்கு பூதங்கள்),
லெஹர் (அலை).
மேக்,
சாகர்,
வாயு. இந்த 8 பெயர்களுமே
பஞ்ச பூதங்களை குறிப்பவை
என்பது குறிப்பிடத்தக்கது.
.
கடைசியாக சென்னையைத்
தாக்கிய "நடா' புயலுக்கு
ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
.
இந்நிலையில்,
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும்,
தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள
"வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது.
உருதுச் சொல்லான
வர்தாவுக்கு தமிழில்
சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.
.
SankaranNsk

Saturday, December 03, 2016

108 ஐயப்ப சரணம்


ஐயப்பன் 108 போற்றி

இந்த சரணத்தை மிகுந்த பக்தியுடன் குருசாமியோ,
வீட்டில் பெரியவரோ சொல்ல மற்றவர்கள் தொடர்ந்து

 "சரணம் ஐயப்பா' என முழங்க வேண்டும்.
ஒலிபெருக்கி மூலம் மற்றவர்களுக்கு தொல்லை தருவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
ஹரிஹரசுதனே... சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
ஆபத்தில் காப்பவனே... சரணம் ஐயப்பா
இன்தமிழ்ச் சுவையே... சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஈசனின் திருமகனே... சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனே... சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
ஓம்காரப் பரம்பொருளே.. சரணம் ஐயப்பா
ஓதும் மறைபொருளே.. சரணம் ஐயப்பா
அவுடதங்கள் அருள்பவனே.. சரணம் ஐயப்பா
சவுபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா
சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
வாபரின் தோழனே... சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
உத்தமனே சத்தியனே... சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா
பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருவின் குருவே... சரணம் ஐயப்பா
துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா
தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியே... சரணம் ஐயப்பா
நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா
பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
அழுதைமலை ஏற்றமே.... சரணம் ஐயப்பா
ஆனந்தமிகு பஜனை பிரியனே... சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றமே.... சரணம்ஐயப்பா
உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
கரிமலை இறக்கமே... சரணம் ஐயப்பா
பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
திரிவேணி சங்கமமே... சரணம் ஐயப்பா
திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
தீபஜோதித் திருஒளியே... சரணம் ஐயப்பா
தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
பலவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
சபரி பீடமே...... சரணம் ஐயப்பா
சரங்குத்தியானே..... சரணம் ஐயப்பா
உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
கடுத்த சாமியே.... சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படியே.... சரணம் ஐயப்பா
பகவானின் சந்நிதியே..... சரணம் ஐயப்பா
பரவசப் பேருணர்வே.... சரணம் ஐயப்பா
பசுவின் நெய்யே..... சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
நாகராஜப் பிரபுவே.... சரணம் ஐயப்பா
மாளிகைப் புறத்தம்மனே.... சரணம் ஐயப்பா
மஞ்சமாதா திருவருளே.... சரணம் ஐயப்பா
அக்கினி குண்டமே.... சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
பஸ்மக் குளமே ... சரணம் ஐயப்பா
சற்குரு நாதனே ... சரணம்ஐயப்பா

மகர ஜோதியே.... சரணம் ஐயப்பா

ஐயப்ப விரதம்.

கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும்.

#குருசாமியின்
கரத்தால் மாலை அணிய வேண்டும்.

குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து
.
"சுவாமியே சரணம் ஐயப்பா!
உன் தரிசனம் தடையின்றி
கிடைக்க வேண்டும்.
இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி
முடிவதற்கு அருள்தருவாய்,''
எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும்.

அன்றுமுதல் தினமும்
குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி,
108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும்.
.
இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது.

மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பகலில் தூங்கக் கூடாது.

பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும்,

""இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன்,''
என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும்.

இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும்,
ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை
ஏற்கவே மாட்டான்.

விரதகாலத்தில்,
பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது.

உரையாடும் போதும்,
முடிக்கும் போதும்
"#சுவாமிசரணம்' என்று கூற வேண்டும்.

இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும்.

கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
சாம்பார் சாதம்,
புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்யலாம்.

நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.

அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது.

பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை,
பஜனைகளில் கலந்து
கொள்ள வேண்டும்.

மாலையணிந்தவர்கள்
வீடு, திருமண வீடுகளில்
மட்டும் உணவு அருந்தலாம்.

பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது.

மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது.

சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும்,
மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்கலாம்.

SankaranNsk

Wednesday, November 30, 2016

அணி இலக்கணம்

வஞ்சப் புகழ்ச்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

புகழ்வது போல் இகழ்தல்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

திருக்குறள் – திருவள்ளுவர்
“கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்” என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

இகழ்வது போல் புகழ்தல்
________________________________
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே

புறநானூறு பாடியவர்: கபிலர்
“புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது” என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.
(இகழ்வது போல் புகழ்தல்)

SankaranNsk

Wednesday, November 23, 2016

எல்லோரும் நல்லவரே..

நல்லவர் சூழ் உலகு.
..........................................
ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.
அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.
அதைப் பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'
"நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..
அசையாமல்..
என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.
'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.
'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..
நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..
உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..
வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...?
அதே போன்று தானே..
நீ என்னைத் தின்றால் நானும் வருத்தமடைவேன்.
அது போலவே..
அந்த வேடன் உன்னை விடுவித்தால்..
நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...
நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..
அதுதானே
நட்பின் இலக்கணம் என்றது.
புறா...புழுவின் பேச்சுத் திறமையைப்பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது..
எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

SankaranNsk

Tuesday, November 22, 2016

தன்னம்பிக்கை

*"தன்னம்பிக்கை கதை"*

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.
அந்த வழியே போன ஒருவன் யானைகளைப் பார்த்தபடியே சென்றான்.
ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.

அருகில் இருந்த பாகனிடம்
இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். *இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது இந்தக்கயிற்றல்தான் கட்டினோம்.*

அப்போது அது இழுக்கும்போது இந்த கயிறுகள் அறுபடவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை
என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,
இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம்
ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல்
*நம்மில்எத்தனைபேர்                       ஒருமுறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகிறோம்.*

தோல்வி என்பது நாம் ஜெயிக்கபோவதின் முதல் படியே.
*தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!*

🔵 *SankaranNsk*🔵

Friday, November 18, 2016

கோபம் (Angry)

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அரண்மனை அறைக்குள்நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி
ஏனெனில் சுற்றிலும்
நூற்றுக்கணக்கான
நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து
"உர்ர்.. உர்ர்.." என்றது,
அந்த நாய்களும் பதிலுக்கு
"உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல்
"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது.
அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.
மறுபடியும்
கோபமும் பயமும் அதிகமானது. உடனே வெறி பிடித்ததைப் போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது
பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.
அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்,
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளைக் கொண்ட அறை .
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள்.
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் பிம்பம்.
நீதி:
உலகம் கண்ணாடி போன்றது.
நாம் கோபப்பட்டால்
பதிலுக்குக்
கோபம் கிடைக்கும்.
அன்பு செலுத்தினால்
அன்பு கிடைக்கும்.
நன்றி.
SankaranNsk

Thursday, November 17, 2016

தேடி

மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
Multi Tabs வசதி.
மிகச்சிறந்த தேடியந்திரம்
மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

Download Links

for Android mobiles - Download link
for Symbian mobiles - Download link
for Java mobiles - Download link
for Windows mobiles - Download link
for Blackberry mobiles - Download link
for Iphone - Download link
for Other mobiles - Download link

மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/

Tuesday, November 08, 2016

சுந்தரகாண்டம்

#சுந்தரகாண்டத்தை_படிப்பதால்_கிடைக்கும்_நன்மைகள்

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.

2.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

3.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

4.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

5.சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

6.ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணெய் வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

7.ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

8.சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

9. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

10.சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

11. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தைப் பெற முடியும்.

12.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

13.சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

14.சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

15.சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

16.சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜெய் ஸ்ரீ ராம்.
SankaranNsk

Tuesday, November 01, 2016

மனோன்மணி மிலிடேரி ஹோட்டல

உள்ளே நுழைந்ததும் வாங்க என்று அன்பொழுக அழைக்கும் உரிமையாளர் குரலும்.
மீன்குழம்பின் வாசனையும் நம்மைக்கிறுகிறுக்கவைக்கும்.

திருவாரூர் பழைய புகைவண்டி சந்திப்பருகே நெருக்கடியான இடத்தில் நீலநிற பெயர் பலகை நம்மை வரவேற்கும்.

சுதந்திரக்காலம்தொட்டே ஒரே சுவையுடன் அம்மா கை பக்குத்தோடு 

மீன்குழம்பும் மட்டன் குழம்பும் கிடைத்தால் யார்தான் மயங்கமாட்டார்கள்.

அதுவும் சுடச்சுட வறுவல் மீனும், இறாலும்,  குழம்புமீனும் கிடைத்தால் அசைவப்பிரியர்களுக்குக் கொண்டாட்டம்வந்துவிடாதா?பெரும்பாலும்    உரிமையாளரே பரிமாறுகிறார்.  இப்போதெல்லாம் அவர் அன்புமகனும் பரிமாறுகிறார்.   

வேறென்னசாப்பிடறீங்க? என்று அவர்கள் கேட்கிற அழகே வயிற்றை நிறைக்கும்.

நாம் சாப்பிட பதினைந்து நிமிடமென்றால்                 இடம்பிடிக்க அரைமணிநேரமாவது ஆகும்.

காரணம் 

ஓரேநேரத்தில் பத்து பனிரண்டுபேரே சாப்பிடமுடியும். நாம் அமர்ந்து சாப்பிட்ட இடத்தைப்பிடிக்கப் போட்டிநடக்கும்.

திருவாரூர் வரும் பல அரசு தனியார் உயரதிகாரிகளின்     மதிய , இரவு உணவு  மனோன்மணி சாப்பாடுதான். இதற்காக வருபவர்களும் உள்ளனர்.

மதியம் இரண்டரை மணிவரை சாப்பாடு கிடைக்கும்.                    இரவு ஏழரைக்கு சாம்பிராணி போட்டதும்                                         கடந்த நாற்பதாண்டுகளுக்கும்மேலாய் நாள்தவறாது சாப்பிடும் (தரமும்சுவையும் புரிகிறதா?)     வாடிக்கையாளர் பெரியவர் ஒருவருக்கு                         முதல்இலை போடுவார்கள்.      பிறகே மற்றவர்களுக்கு..

சிலவாடிக்கையாளர்கள் இரண்டொரு மீன்துண்டுகள் கேட்கும்போது நாளைக்கு சாப்பிடலாம் என்று நாசுக்காய் மறுப்பார்.இன்றுவரை குறிப்பிட்ட அளவுக்கு அதிகம் உணவைத்தயாரிப்பதில்லை.

ஞாயிறன்றும் அமாவாசையன்றும் கடைகிடையாது.பல அரசு அதிகாரிகள் திருவாரூர்வந்தால் முதலில் சொல்லும் வார்த்தை மனோன்மணி சாப்பாடு சொல்லிடுங்க என்பதாகவே இருக்கும்.

நீங்கள் திருவாரூர் வந்தால் ஒருமுறை சாப்பிட்டுப்பாருங்கள்.

அதன்பின்னர் அந்த மீன்குழம்பும் மட்டன்குழம்பும்  திருவாரூர் பெயரைக்கேட்டதும் நாவில் ஊறும்.

Monday, October 31, 2016

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக
மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது.

எல்லைகள்

தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

மதராஸ் மாகாணம்

தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 - ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

பாரம்பரியம்

ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கும் முன்னதாகப் பழங்கற் காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் தமிழ் மொழியில் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; உலக அளவிலான பாரம்பரியக் களங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன.

நகர இந்தியாவின் சின்னம்

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11- வது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையில் ஏழாவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவதாக உள்ளது.

மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கக்கூடிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2006 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இந்தியாவிலேயே அதிகமாக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம் இதுதான். இந்தியாவின் 6 சதவீத மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் 10.56 சதவீத வணிக நிறுவனங்கள் இங்கே உள்ளன.

இந்தியா உருவாக்குகிற மொத்த வேலை வாய்ப்புகளில் 9.97 சதவீதம் தமிழகத்திடம் உள்ளது. அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிற இந்திய மாநிலங்களில் இரண்டாவதாக இது உள்ளது. அது மட்டுமல்ல… தொழிற் சாலைகள் எண்ணிக்கையிலும் மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கறிக்கோழி வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெளிநாடுகளின் நேரடி மூலதனத்தைப் பெறுவதில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.ஆட்டோமொபைல் தொழில் செழித்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

🔵 *SankaranNsk* 🔵

Thursday, October 20, 2016

கதை

ஒரு திகில் கதை.
# படித்து பயந்தது #
.
அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம்.
கடுமையான மழை.
.
சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை.
பஸ் ஒன்றும் வருவதாகவும் தெரியவில்லை.
ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது.
.
பஸ் ஸ்டாப்பில் அவர் அருகில் வந்து நின்றது.
.
சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை.
.
கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார்.
.
கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.
.
அப்பொழுதுதான் சூசை கவனித்தார்,
டிரைவர் சீட்டில் யாருமே இல்லை.
.
ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

சூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.

சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி.

செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ஸ்டீயரிங் வீலை திருப்பியது.
பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார்.

.
கொஞ்ச தூரத்தில் ஒரு ஹோட்டல் தெரிந்தது.
.
ஒரே ஓட்டமாக அங்கே ஓடினார்.

“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.
.
ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.
.
அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டோடு உள்ளே நுழைந்தனர்.

அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி,
“இந்த ஆளுதான். ரிப்பேரான காரை
நாம மழையில
தள்ளிக்கிட்டு வரும்போது உள்ளே
ஏறி உக்காந்தவன்”
என்றான்.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk