Tuesday, April 25, 2017

நாழிகை வட்டில்

நாழிகை வட்டிலும் நாழிகை கணக்கரும் :

தற்காலத்தில் நாம் நேரத்தை கணக்கிட கடிகாரத்தை பயன்படுத்துவதைப் போல் அக்காலத்தில் நம் தமிழ் மூதாதையர்கள் நேரத்தை கணக்கிட 'நாழிகை வட்டில்' என்ற கருவியினை பயன்படுத்தினர்...பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்களின் அரண்மனைகளிலும், போர் பாசறைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நாழிகையை கணக்கிட்டு நேரத்தை அறிய நாழிகை வட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது...இதைக் கொண்டு நாழிகையை கணக்கிட்டு கூறுபவர்கள் 'நாழிகை கணக்கர்' என்றழைக்கப்பட்டனர்...
வட்டில் ஒன்றில் நீர் நிரப்பி,ஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, எஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் கருவி ஒன்றை பழந்தமிழர்கள் கண்டறிந்தனர்...அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கணக்கிட்டு வாழ்ந்தனர்...
இக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயர்...
இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி போன்ற பல்வேறு சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன...

நன்றி : #Abirami_Baskaran

Thursday, April 20, 2017

இலைகளின் அரசியல்

                     அரசு,வேம்பு,கருவை,
வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் .

       அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவைகளின் இலைகள் இலைகள் எனப்படாமல் ‘கீரை’ ஆகின்றது.

       மண்ணிலே படர்ந்து கிளைத்து வளரும் கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது.
             
              கோரை ,அறுகு, வகைத்தாவரங்களின் இலைகள் ‘புல்’ என பெயர் பெறுகின்றன.

         மலைகளில் உயர்ந்து விளைகின்ற உசிலை போன்ற இலைகளுக்குப் பெயர் ‘தழை’ எனப்படுகிறது.

      வரகு, நெல்,முதலியவற்றின்  அகலமற்ற உயரம்குறைந்த பயிர்களின் நீண்ட நெடிய இலைகள் ‘தாள்’ என வழங்கப்படுகிறது.

       தாழை,சப்பாத்தி, கள்ளி, போன்ற வறண்ட நிலத்தாவர இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’ எனப்படுகிறது.
          
               நாணல் ,கரும்பு ஆகியவற்றின் இலைகள் ‘தோகை’ என்று தமிழ் கூறுகின்றது.

         தென்னை, கமுகு, பனை முதலிய நெடிதாய் வளர்ந்து உயர்ந்த மரங்களின்  இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப் படுகின்றன.

             நம்தமிழன்றி வேறு எம்மொழியிலும் இத்தகைய நுண்ணிய வேறுபாடுகள் இலைகளின் அடிப்படையில் கூறப்படவில்லை.
         வாழ்வாங்கு வாழ வாழ்வைப்பகுத்ததோடு தமிழ் நிற்காமல் தாவரவியல் அறிவையும் மொழியின் வாயிலாகப்புகட்டியது தமிழின் பெருமைகளுள் ஒன்று.

Sankaran Nsk.

Tuesday, April 18, 2017

அய்க்கண் அறிமுகம்.

#அய்க்கண்.

தமிழக அரசு 16 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில்
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா,
மூதறிஞர் ராஜாஜி,
கலைஞர்
கருணாநிதி,
புதுமைப்பித்தன்,
கு. அழகிரிசாமி,
ஜெயகாந்தன்,
ஆர் சூடாமணி,
சுஜாதா
முதலியோரின் கதைகளுடன் இவரது கதையும் அதில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் 2005ல் உலகத தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது உலகத் தமிழ்
எழுத்தாளர்களிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது.

பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007ல் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய
அனைத்துலகச் சிறுகதைப் போட்டியில் முனைவர் அய்க்கண்ணின் சிறுகதை முதல் பரிசை
வென்றது.

உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநில

எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இவரது கதைதான்.

அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது
நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.

தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கியின் சிறுதைப் போட்டி, கலைமகள்,
அமுதசுரபி குறுநாவல் போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

சாகித்திய அகாடெமி தமிழில் வெளிவந்த சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து
வெளியிட்டது. அவற்றில் இவரது கதையும் அடங்கும்.

Institute of Asian Studies நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம்
பற்றிய கலைக் களஞ்சியத்தில் இவரைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து "நற்கதை நம்பி" எனும் விருதையும்,
ஸ்ரீஜெயேந்திரர் இலக்கியப் பரிசினையும் ராஜசர் அண்ணாமலை செட்டியார் பொற்கிழி
விருதையும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் அழகப்பா பல்கலைக் கழகமும்

இணைந்து வழங்கிய "புதிய இலக்கியச் செல்வர்" பட்டத்தையும் மத்திய அமைச்சர் திரு. ப.
சிதம்பரம் அளித்த "எழுத்து வேந்தர்" எனும் பட்டத்தையும் வி.ஜி.பி. இலக்கியப்
பரிசினையும் இவர் வென்றுள்ளார்.

இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய

மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும்,
தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக
வைக்கப்பெற்றுள்ளன.

தமிழக அரசின் பிளஸ்_டூ வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச்
சேர்க்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை M.Phil, Ph.D. பட்டங்களுக்கு ஆய்வு
செய்துள்ளனர்.

சுமார்
1,000 சிறுகதைகள், நாவல்கள்,
நாடகங்களை
எழுதியுள்ள
இவரது படைப்புகள் 71
நூல்களாக வெளிவந்துள்ளன.

Sunday, April 16, 2017

தொட்டில்

தொட்டிலிடுதல்

     குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க
வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும். குழந்தையை
முதன்முதலில் தொட்டிலில் இடுவது நாட்டுப்புற மக்களால் ஒரு
சடங்காகவே மேற்கொள்ளப் படுகிறது. குழந்தையின் தாய் மாமன்
தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை
ஆகியவற்றைக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில்
குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். இவ்வாறு
செய்வதே தொட்டிலிடுதல் சடங்காகும். தமிழரின் தாலாட்டுப்
பாடல்களில் இது குறித்த செய்திகளைக் காணலாம்.

பச்சை இலுப்பை வெட்டி - என்கண்ணே உனக்கு
பால்வண்ணத் தொட்டில்கட்டி
தொட்டிலிட்ட அம்மானும் -என்கண்ணே
தூரவழி போறாரம்மா

என்ற தாலாட்டுப் பாடல் தொட்டிலிடுதல் குறித்து எடுத்துரைக்கும்.

Saturday, April 15, 2017

தீதும் நன்றும்


                   தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னைக் கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.

Thursday, April 13, 2017

அழிபசி

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய
DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல.
ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (#குறள்226)

பொருள் :

                 வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

#படித்ததில்பதிந்தது
Sankaran Nsk

Thursday, April 06, 2017

காலா! என் காலருகே வாடா

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு கூற்றை உதைக்கும் குறியது வாமே (553)

        காற்று நம்மைச் சுற்றிச்சுற்றி வந்தாலும், அதைப்பிடித்து, இழுத்து அடக்கி நமது கட்டுப்பாட்டில் ஆட்டிப்படைக்கும் கணக்கறிவாற்றல்,சற்றும் இல்லாமலேதான் மக்கள் இருக்கின்றனர். எக்காலமும்
வாழ்ந்து கொண்டே செல்கின்றனர். காற்றை அப்படி உள்ளே ஏற்றியும், அடைத்தும், வெளியே இறக்குகின்ற கணக்கை அறிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால், உடலும் புத்தியும் வலிமை பெற்றுவிடும்.

அங்கே, உயிரைக் கவர வருகின்ற கல்மனங்கொண்ட எமனையும்,
எட்டி உதைக்கின்ற வலிமை வந்து விடும். எமனை எட்டி உதைக்கலாம் என்பதால், அதை சாகா வரம் என்று நாம் சொல்லிவிடக்கூடாது.

உயிர் வாதை இல்லாமல் நீண்ட நாள் வளத்தோடு வாழ முடியும் என்பதைக் குறிக்கத்தான் கூற்றையும் உதைக்கின்ற குறியாக உயர்நிலை வந்து விடுகின்றது என்று முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

இத்திருமந்திரக்கருத்தின் அடிப்படையில்தான் பாரதி,
"காலா என் காலருகே வாடா "
என்று காலதேவனை துணிவுடன் அழைத்தார்.

முகநூல்நண்பர் 
George Mariannan ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பரவவிட்டதன் சிந்தனை தொடர்ச்சியே இது. இப்பதிவின் பெருமை அவரையேச்சார்ந்தது.

Wednesday, April 05, 2017

ஆசிரியரின் தகுதி

ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார்.

“ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர்.

“குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை.

“அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது.
அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும்.
குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk