ஜென் கதை.
அரசன் ஒருவனுக்கு ஞானம் பெற வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
நாட்டை தன்னுடைய மகனிடம் ஒப்படைத்து விட்டு ஞானம்பெறுவதற்கான வழியைத் தேடிப் புறப்பட்டான்.
ஞானத்தில் தெளிவு பெறுவதற்காக பல மதங்களையும்,
பல தத்துவங்களையும்,
பல சமயங்கள் கூறும் சடங்கு களையும் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்தான்.
உருவ வழிபாடு,
அருவ வழிபாடு,
வேள்வி,
யாகம் போன்றவற்றை விளங்கிக் கொள்ள,
அவற்றில் பல வழிகள் சொல்லப்பட்டிருந்தன.
ஆனால் ‘ஜென்’ தத்துவம் பற்றி மட்டும் சரிவர எதிலும் விளக்கப்படவில்லை.
எனவே அந்த அரசன், யாராவது ஒரு ஜென் குருவைசந்தித்து, தன்னுடைய சந்தேகத்திற்கான விளக்கத்தைக் கேட்டுப் பெறுவது என்று முடிவு செய்தான்.
பலரிடம் விசாரித்ததில், அனைவரும் ஒரு ஜென் குருவைப் பற்றி பெருமையாகக் கூறினர். ஆகையால் அந்தக் குருவிடமே தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க அரசன் முடிவு செய்தான்.
அவன் சென்ற வேளையில்,
அந்தக் குரு வெறுமனே அமர்ந்து கொண்டு இருந்தார்.
அரசன் குருவை வணங்கினான்.
‘குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது. அதனை எனக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டான்.
அதைக் கேட்டதும்,
‘ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா?’என்று ஆரம்பித்தவர்,
‘போய் சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன்’
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மன்னனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ‘சே... என்ன இது? இவரைப்பற்றி எவ்வளவு பெருமையாகக் கூறினார்கள். அதை நம்பி இவரிடம் இருந்து எவ்வளவு பெரிய விளக்கத்தை எதிர்பார்த்தோம்.இவர் என்னவென்றால்,பேசிக்கொண்டிருக்கும்போதே சாதாரணமாக சிறுநீர் கழிக்கப் போவதாகச் சொல்லிச் சென்றுவிட்டாரே’ என்று மனதிற்குள் நினைத்தான். இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
சிறிதுநேரத்தில் திரும்பி வந்த குரு,
‘என்ன புரிந்ததா?’
என்று மன்னனைப் பார்த்து கேட்டார்.
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அரசனுக்கு, எதுவுமே சொல்லாமல் புரிந்ததா? என்று குரு கேட்டது அதிர்ச்சியை அளித்தது.
என்ன ஏதென்று அறியாமல் திருதிருவென்று விழித்தான் மன்னன்.குரு இப்போது சொன்னார்.
‘அரசனோ, அறிஞனோ, அறிவிழந்தவனோ.. ஏன் நானாக இருந்தாலும் சரி... சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியுமா? அதைச் செய்துதானே ஆக வேண்டும்? அதுவும் அவரவர்தானே அதைச் செய்தாக வேண்டும்? எனக்குப் பதில் உன்னை அனுப்ப முடியுமா என்ன?’
என்று கேள்வி எழுப்பினார்.
இப்போது மன்னனுக்கு புரிந்து விட்டது.
அவனுக்கு ஞானம் வந்தது.
அவரவர் வாழ்வு என்பது அவரவர் கையில்.
அதை எவரிடமும் தள்ள முடியாது. அதுதான் ஜென் தத்துவம்.
உபதேசங்கள் வெறும் அடையாளங்கள்தான்.
அவை எதையும் நமக்கு அளிப்பதில்லை.
பசி, தூக்கம் போல
ஞானமும் ஓர் உணர்வு.
அதை எவரும், எவரிடம்
இருந்தும் பெற முடிவதில்லை.
தன் வாழ்வைத் தானே வாழ்வதன் மூலம்தான் அனுபவம் பெற முடியுமே தவிர,
பிறர் அனுபவங்களைக் கொண்டு,
நாம் ஞானம் பெற முடியாது.
SankaranNsk
No comments:
Post a Comment