சப்தவிடங்க ஸ்தலங்களின் வரலாறு...
=================================================
திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சோழ சக்கரவர்த்தி, தேவாசுர யுத்தத்தின் போது இந்திரனுக்கு உதவி செய்தான். இந்நிகழ்வை இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,
""வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம் காத்த உரவோன், உயர் விசும்பில்
தூங்கெயில் மூன்றெரிந்த சோழன்காண் அம்மானை''
என்று பாடுகிறார்.
அதாவது , ""மூன்று மதில்கள் பொருந்திய ஒரு நகரம்; அது வானத்தில் அசைந்து செல்லும் தன்மையுள்ளது; அந்நகரில் அசுரர்கள் வாழ்ந்து வந்தனர்; முசுகுந்த சோழன் தேவர்கள் வியக்கும்படி அந்நகரை அழித்து, அசுரர்களை வென்றான். இவன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்'' என்று விளக்குகிறார்.
அதனால் மகிழ்ந்த இந்திரன், என்ன வரம் வேண்டுமோ தருகிறேன் என்றான். முசுகுந்த சோழன், இந்திரன் பூஜை செய்யும் சிவலிங்கம் வேண்டும் என்றான். அதிர்ச்சியுற்றான் இந்திரன்.
தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தன்னிடம் உள்ள லிங்கம் போன்றே ஏழு மரகத லிங்கங்களை செய்யப் பணித்தான். அன்றிரவு தியாகேசர் திருவாரூரில் எழுந்தருள திருவுளம் கொண்டு முசுகுந்த சோழனின் கனவில் வந்து எந்த லிங்கத்தின் மீது செங்கழுநீர்ப்பூ உள்ளதோ அதுவே அசல் விடங்கர் மற்றவை அது போன்ற நகல்கள் என்று கூற மறு நாள் காலையில் செங்கழுநீர்ப்பூ சூடிய விடங்கரை வேண்டிப்பெற்றான் முசுகுந்தன். ஆரூரரின் திருவுளத்தை அறிந்த இந்திரன் தனது பூஜையில் இருந்த விடங்கரை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் வழங்கியதோடு நில்லாமல் மற்ற ஆறு விடங்க லிங்க மூர்த்திகளையும் மன்னனிடம் வழங்கினான்.
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனின் பூஜை விக்ரகத்தைத் திருவாரூரிலும் ஏனைய ஆறு மூர்த்திகளை சுற்றியுள்ள ஆறு ஊர்களிலும் பிரதிஷ்டை செய்தான். இன்றும் நம் தியாகேசருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
செங்கழுநீர் பூக்கள் (நீலோத்பலம்) மலரும் செங்கழுநீர் ஓடை என்று ஒன்று நம் ஊரில் இருந்தது. அது இன்று ஆக்கிரமிப்பில் போய் விட்டது (மண்ணின் மைந்தர்களுக்கே வெளிச்சம்)
“டங்கம்” என்றால் உளி. பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளிக்கும் இப்பெயர் பொருந்தும். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று நம்பிக்கை உண்டு. இதனால் இவை சப்த விடங்க மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தலத்திலும் இறைவனின் திருநடனம் பல்வேறு வகையில் பிரசித்தி பெற்றது. கீழ்க்கண்ட ஏழு மூர்த்திகளின் பெயர்களும் நடனங்களும் வெவ்வேறாக இருந்தாலும், பொதுவாக அனைத்து சுவாமிகளும் ‘தியாகராஜா’ என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம் (சுவாச நடனம்)
திருநாகை (காயாரோகணம்) - சுந்தர விடங்கர் - பாராவார தரங்க நடனம் (கடல் அலை நடனம்)
திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம் (கோழி நடனம்)
திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (வண்டு நடனம்)
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை நடனம்
திருநள்ளாறு - நாக விடங்கர் - உன்மத்த நடனம்
திருமறைக்காடு - புவனி விடங்கர் - ஹம்சபாத நடனம்.
சப்தவிடங்க தலங்களில் நம் ஆரூரே தலையாயது என்பதை மெய்ப்பிக்கும் வரலாறு இது.சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.
சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.....
நண்பர் சுந்தர் வாசுதேவன்பதிவு
உங்கள் பார்வைக்கு....
No comments:
Post a Comment