(புறநானூறு : 171)
.
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!
-பிட்டங் கொற்றனைப் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
இன்று சென்று கேட்டாளும் தருவான். சில நாள் கழித்துச் சென்று மீண்டும் கேட்டாளும் தருவான். முன்புதான் கொடுத்தேனே என்று சொல்லாமல் வரும்போதெல்லாம் வெறும் பாத்திரமாக இருக்கும் என் களத்தை நிறைத்து அனுப்புவான். அவனுடைய வேந்தன் மகிழும்படியான பல அரிய செயல்களைச் செய்யும் வேலையுடைய கொற்றன் அவன்.
நல்ல இனத்துக் காளைகளை, தொழுவத்தோடு சேர்த்து கேட்டாலும், களத்தில் குவிக்கப்பட்டிருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகலன்களை யானையொடு வேண்டினாலும் பெரும் கொடையாளனாகிய அவன் வழங்குவான்.
அவன் எனக்கு மட்டும் இப்படிக் கொடுப்பவனல்லன். அதனால் எனக்கு தந்தை போன்றவன். அவனது அடியில் முள்ளும் நோவும் தைக்காதிருக்கட்டும்.. கொடுப்பவர்கள் அரியதாகி விட்ட இக்காலத்தில் உயிர் வாழ்வதாகிய அவனது முயற்சி வாழ்வதாகட்டும்...
---------------------------------------------------------------
No comments:
Post a Comment